இளைஞர்களின் தொழில்திறன்களை மேம்படுத்தி, அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “Door to Door Skills Campaign” நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்ட நிகழ்வு, 2026.11.05 ஆம் திகதி வியாழக்கிழமை இன்று காலை 9.00 மணியளவில் கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கோப்பாய் பிரதேச உதவி திட்ட பணிப்பாளர் அவர்களின் ஏற்பாட்டில், கோப்பாய் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய பிரதேச செயலாளர் இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும், தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்குவதற்கும் தொழிற்பயிற்சிகள் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, பாடசாலைக் கல்வியை நிறைவு செய்த பின்னர் உயர்கல்வியைத் தொடர முடியாத அல்லது தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு அவர்களின் திறன்களுக்கு ஏற்ற தொழிற்பயிற்சிகளை வழங்கி, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
வாகனத்திருத்தம்,மின்சாரப் பொருத்துதல், கணினி, சமையல், தையல், அழகுக்கலை மற்றும் குழாய் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் இளைஞர்கள் தங்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வதுடன், சுயதொழில் முயற்சிகளிலும் ஈடுபட முடியும் என வலியுறுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கிராம மட்டத்தில் உள்ள சமூக சக்தி அமைப்புகளின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் வீடு வீடாகச் சென்று, தொழிற்பயிற்சியில் ஆர்வமுள்ள இளைஞர்களை அடையாளம் காணுதல், அவர்களின் தேவைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் உரிய பயிற்சி நிறுவனங்களுடன் இணைத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. குறிப்பாக, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட தொழில் வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் தொழிற்பயிற்சிகளைப் பெற விரும்புவோருக்கு இத்திட்டத்தின் ஊடாக உரிய வழிகாட்டல்களையும் பயிற்சி வாய்ப்புகளையும் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இளைஞர்களைத் தவறான வழிநடத்தல்களிலிருந்து பாதுகாத்து, அவர்களின் திறன்களைச் சரியான திசையில் வளர்த்து, நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்குப் பங்களிக்கக்கூடிய ஆற்றல்மிக்க பிரஜைகளாக உருவாக்குவதில் இத்திட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நிகழ்வில் மாவட்ட இணைப்பாளர் (திறன் அபிவிருத்தி) திரு. தெ. நீலாம்பரன், சமூக வலுப்படுத்தல் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக சக்தி தலைவர்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஏனைய துறைசார் உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்துகொண்டனர்
<














